பக்கங்கள்

வியாழன், 22 நவம்பர், 2012

சிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு...


சிறப்பான கறவை கொடுக்கும் சிந்து சமவெளி மாடு...


 
காசி.வேம்பையன், படங்கள்: இரா. சண்முகசுந்தரம் 

12 முதல் 15 கன்றுகள் வரை ஈனும்.
மருத்துவ குணம் கொண்ட பால்.
முரட்டுத்தனம் இல்லாத மாடு. 



அதிக பால், அதிக வருமானம்...' என்றதுமே... வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாடுகள், கலப்பின மாடுகளைத்தான் கைகாட்டுவார்கள்... கால்நடைத் துறையிலிருப்பவர்கள். ஆனால், நம்நாட்டிலேயே அதிக பால் தரக்கூடிய மாடுகளும் இருக்கின்றன என்பதுதான் உண்மை. இந்த உண்மையை மெய்ப்பிக்கும் விதமாக தமிழகத்தின் பல பாகங்களிலும், உள்நாட்டு ரகங்களை வளர்த்து, லாபம் பார்த்துக் கொண்டிருக்கும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதோ... திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்த அருண்பிரசாத், குஜராத் மாநிலத்தில் இருந்து 'காங்கிரேஜ்’ ரக பசுக்களை வாங்கி வந்து, அவற்றின் மூலம் கிடைக்கும் பால் மூலமாகவும்... அதை மதிப்புக்கூட்டி 'பனீர்’ உற்பத்தி செய்தும் அசத்தலான லாபம் பார்த்து வருகிறார்.

''காலங்காலமா விவசாயம்தான் எங்க குலத் தொழில். எங்க தாத்தா 150 மாடுகளோட பண்ணை வெச்சுருந்தார். எங்க அப்பா, 'ரைஸ் மில்’ வெச்சுருந்ததால, மாடுகளைப் பராமரிக்க முடியாம அத்தனையையும் வித்துட்டு, பாலுக்காக அஞ்சு கலப்பினப் பசுக்களை மட்டும் வெச்சுருந்தார்.



நான், 'லெதர் டெக்னாலஜி’ படிச்சேன். அது சம்பந்தமான வேலை எனக்கு சரிப்பட்டு வராததால, ரைஸ் மில்லைத்தான் பாத்துக்கிட்டிருந்தேன். இருந்தாலும், எனக்கு மாடு வளர்க்குறதுல நிறைய ஆசை. அதுபத்தி விசாரிக்கிறப்போதான், 'நம்ம மண்ணுக்கும்... சூழ்நிலைக்கும் ஏத்தது, நாட்டு மாடுகள்தான்’னு தெரிஞ்சுக்கிட்டேன். நம்ம நாட்டுலயே அதிக பால் கொடுக்குற கிர், ஓங்கோல், சாஹிவால், காங்கிரேஜ் மாடுகள் இருக்கறதையும் தெரிஞ்சுக்கிட்டேன். 

குஜராத்ல இருக்கற நண்பர் மூலமா, ஒன்பது காங்கிரேஜ் ரக சினை மாடுகளை வாங்கினேன். இதை, சிந்து சமவெளி மாடுனும் சொல்வாங்க (சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் இருக்கும் மாடும்... இந்த காங்கிரேஜ் ரக மாடும் ஒன்று போலவே இருக்கின்றன).

போக்குவரத்துச் செலவு எல்லாம் சேர்த்து, ஒரு மாட்டோட விலை 35 ஆயிரம் ரூபாய். கொண்டு வரும்போதே ஒரு மாட்டுக்கு சினை கலைஞ்சிடுச்சு. மீதி எட்டு மாடுகள் கன்னு போட்டுச்சு. அதுல நாலு காளை, நாலு கிடேரினு... ஏழு மாசத்துல இருந்து ஒன்பது மாசக் கன்னுகளா அதெல்லாம் நிக்குதுங்க'' என்று முன்கதை சொன்ன அருண்பிரசாத், தொடர்ந்தார். 

பெண்களே வளர்க்கலாம்!

''இந்த இன மாடுகள் கடுமையான மழை, வெயில், பனினு 5 டிகிரி வெப்பநிலையில இருந்து...

108 டிகிரி வெப்பநிலை வரை தாங்கக்கூடியத் தன்மையுடையது. நல்லா கம்பீரமானத் தோற்றம் இருக்கறதால... பாக்கறதுக்கு பயமா இருக்கும். ஆனா, உண்மையில இது ரொம்ப சாது. பெண்களே இதைப் பராமரிச்சுடலாம். அதோட இது அதிகளவுல பால் கறக்குது. ஒரு பசு தினமும் 10 லிட்டர்ல இருந்து

15 லிட்டர் வரைக்கும் பால் கொடுக்குது. ஒரு ஈத்து காலத்துல (300 நாட்கள்)... 3 ஆயிரம் லிட்டர்ல இருந்து 3 ஆயிரத்து 600 லிட்டர் வரை பால் கிடைக்குது. பால் நல்லா வெள்ளையா இருக்குது.

4.5 % முதல் 5.7 % வரை கொழுப்புச்சத்தும், 8 முதல் 9% வரை இதரச் சத்துக்களும் இருக்குது.

நோயற்ற மாடுகள்!

பெரும்பாலும், இந்த மாடுகளுக்கு தொற்று நோய் வர்றதில்லை. பால்லயும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாயிருக்குமாம். இந்தப் பாலைச் சாப்பிடுறவங்களுக்கு பெரும்பாலான நோய்கள் கட்டுப்படுதுனும் சொல்றாங்க. பிரேசில் நாட்டுல, நம்ம நாட்டு மாடுகளான ஓங்கோல், கிர் இனத்தோட, காங்கிரேஜ் இன மாடுகளையும் வளர்க்கறாங்க. 25 லிட்டர்ல இருந்து 28 லிட்டர் வரைக்கும் பால் கறக்குற மாதிரி, காங்கிரேஜ் மாடுகளை மேம்படுத்தியிருக்காங்க'' என்று சொன்ன அருண்பிரசாத், வளர்ப்பு முறைகளுக்குள் புகுந்தார்.

இரண்டு வயதில் பருவம்!

''ரெண்டு வயசுலயே கிடேரி கன்னுகள் பருவத்துக்கு வந்துடும். காளை மூலமாவோ, அல்லது செயற்கை முறையிலோ கருவூட்டல் செஞ்சோம்னா... ஒன்பதரை மாசத்துல கன்னு ஈன்றுடும். ஒரு பசு, அதோட ஆயுள் காலத்துல பன்னெண்டுல இருந்து பதினஞ்சு கன்னுக வரைக்கும் ஈனும். கன்னு போட்ட ரெண்டாவது மாசமே, அடுத்த சினைக்குத் தயாராயிடும். தயார்னு தெரிஞ்ச பன்னெண்டு மணி நேரத்துக்குள்ள காளையோட சேத்துடணும். எட்டு மாச சினையாக இருக்குறப்ப பால் தானாவே வத்திப்போயிடும்.

இந்த ரக மாடுகளைக் கட்டிப்போட்டு வளர்க்க முடியாது. தினமும் கண்டிப்பா மூணு மணி நேரமாவது காலாற நடக்கவிட்டு மேய்க்கணும். சாயங்கால நேரத்துல ஒரு மாட்டுக்கு 10 கிலோ அளவுக்கு பசுந்தீவனம்; ராத்திரி கொஞ்சம் போல வைக்கோல் கொடுத்தா போதும். அடர் தீவனம் கொடுக்கணும்னு அவசியமில்லை. நமக்கு வசதி இருந்தால், அதையும் கொடுக்கலாம். 

கறவையில இருக்குற மாடுகளுக்கு தினம் காலையில, சாயங்காலம்... கால் கிலோ கடலைப் பிண்ணாக்கு, 2 கிலோ அடர் தீவனம், முக்கால் கிலோ நொய் அரிசி கஞ்சி கலந்து கொடுக்கிறேன். கறவையில இல்லாத மாட்டுக்கு தினமும் ரெண்டு கிலோ அடர் தீவனம் கொடுக்குறேன்'' என்ற அருண்பிரசாத் நிறைவாக,

வருடத்துக்கு 2 லட்சம்!

''என்கிட்ட எப்பவும் மூணு, நாலு மாடு கறவையில இருந்துக்கிட்டே இருக்கும். இப்போ கூட, மூணு மாடு கறவையில இருக்கு. ஒரு நாளைக்கு சராசரியா, 30 லிட்டர் அளவுக்குக் குறையாம பால் கிடைக்குது. லிட்டர் 30 ரூபாய்னு விற்பனை செய்றேன். ஒருவேளை பால் மிச்சமாயிடுச்சுனா... பனீர் ஆக்கி வித்துடுவேன். 30 லிட்டர் பால் மூலமா தினமும் 900 ரூபாய் கிடைக்குது.

அதுல, அடர் தீவனம், வைக்கோல், ஆள் கூலினு 400 ரூபாய் செலவு போக, ஒரு நாளைக்கு 500 ரூபாய் லாபமா கிடைக்குது. ஒரு மாசத்துக்கு 15 ஆயிரம் ரூபாய். இதில்லாம, ஏழெட்டு மாசம் வளர்ந்த காளைக் கன்னு ஒண்ணு, 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. அதையெல்லாம் சேர்த்து, கணக்குப் போட்டா... வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய்க்கு மேல கண்டிப்பா லாபம் கிடைச்சுடும்'' என்று கணக்குப் போட்டு சொன்னவர், 

''இன்னும் மாடுகளை அதிகப்படுத்தலாம்னு இருக்கேன்'' என்றபடி, மாடுகளை வாஞ்சையாகத் தடவிக் கொடுத்தபடி நமக்கு விடை கொடுத்தார்.

தொடர்புக்கு
அருண்பிரசாத், செல்போன்: 98428-26284.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக